அறிமுகம்
மனிதர்களிடம் ஆற்றல்கள் நிறைய உள்ளன. இவை அவர்களிடம் உள்ளார்ந்த
நிலையில் அடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்ந்து மனித வாழ்க்கை
வெற்றி பெறுவதற்கு இன்றியமையாத அடிப்படைகள் இரண்டு. ஒன்று தனிமனிதன் தனது
ஆற்றல்களையும் சிறப்புகளையும் முழுமையாக வளர்த்துக் கொண்டு செயலாற்றுதல்,
மற்றொன்று சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தன் என்பனவாகும்.
இந்த
இரண்டு அம்சங்களும் அமையப் பெற்றவர்கள் சிலரே உள்ளனர். அவர்களுள்
பேராசிரியர் மா. செல்வராஜா அவர்களும் ஒருவராவார். இவர் மனிதர்களை
நல்லவர்களாகவும், எல்லோருக்கும் நன்மை செய்பவர்களாகவும் மெற்றாம் பெறச்
செய்ய வேண்டும் எனும் சிந்தனை வீச்சுடன் என்றும் செயற்படுபவர்."எண்ணித்
துணிக கர்மம்" (திருக்குறள்-467வது பாடல்) என்பதற்கு ஏற்ப தான் சார்ந்த
சமூகத்தை விழிப்படையச் செய்பவர். எல்லோரும் வாழ வேண்டும் என்ற உயரிய
சிந்தனைகளைக் கொண்ட அவருடைய பணிகளின் வருகையே ஒளிக்கல்லூரி எனும் கல்வி
நிறுவனமாகும். இது ஏழை மாணவர்களுடைய கண்ணீரைத் துடைத்து அவர்களின்
வாழ்வுக்கு ஒளி பாய்ச்சியது.
ஒளிக்கல்லூரி எனும்
நிறுவனத்தின்
தேவை
நல்ல
வினைத்திறன் உள்ள ஒரு முகாமையாளனின் உருவாக்கத்தில் சமூகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏனெனில், அவன் வாழும் சமூகமே அவனது ஆசான். நிறுவனச் செயற்பாட்டுக்கு முகாமைத்துவம், நிருவாகம், தலைமைத்துவம் என்பன சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறுவனத்தை வழிநடத்திச் செல்வதற்கு நிறுவனத் தலைவரின் நாளாந்த பணியே அவசியமாகும்.
ஒளிக்கல்லூரி
எனும் நிறுவனம் பேராசிரியர் மா. செல்வராஜா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் வழிநடத்தப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த முகாமையாளர். சமூகம் உயர வேண்டும் என்பதற்காகக் கனவு கண்டவர். இந்த நிறுவனம் சிறந்த முறையில் செயற்பட்டதன் காரணமாகத்தான் இன்றுவரையும் அது இயங்கு நிலையில் உள்ளது. அதற்கென்று தனியான கட்டிடத்துடன் சிறப்புப் பெறுகின்றது. ஒளிக்கல்லூரி எனும் நிறுவனத்தின் தேவை இன்று பலராலும் உணரப்பட்டு உணர்வுபூர்வமாக நோக்கப்படுகின்றது.
ஏழை
மாணவர்களின் கல்விப் பயணத்திற்கான அனுமதியை வழங்கி அவர்களை நீண்ட பயணத்திற்கு வழிகாட்டியது. இன்று ஒளிக்கல்லூரியில் கற்ற பலர் உயர்ந்த தொழிலை வகிக்கின்றனர். கற்பித்த பலர் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகையவர்களுடைய அனுசரணை இன்று வரையும் ஒளிக்கல்லூரிக்குக் கிடைத்த வண்ணமே உள்ளன.
ஒளிக்கல்லூரி
1979ம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் இயங்கிக் கொண்டு இலவசமாகக் கல்வியை வழங்குகின்றது. இதற்காக பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களும், சேவையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்டதாரி மாணவர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். இத்தகைய முயற்சி ஒளிக்கல்லூரியின் வெற்றிப் பயணத்திற்கு அடித்தளமாக அமைகின்றது.
ஒளிக்கல்லூரி
எனும் நிறுவனத்தின் சிறப்பை உணர்ந்து பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவிகளைச் செய்துள்ளன. றோனியோ மெசின், தட்டச்சு இயந்திரம், மூக்குக் கண்ணாடி, காகிதாதிகள், தென்னம்பிள்ளைகள், ஆசிரியர்களுக்கான உளநலப் பயிற்சி என்று பல கோணங்களில் உதவியுள்ளன. இவை அந்த நிறுவனத்தின் உயர்ச்சிக்கு ஒரு படி தூபமிட்டன.
ஒளிக்கல்லூரியின் செயற்பாட்டினை மையமாகக்
கொண்டே பல போட்டி நிகழ்ச்சிகளும் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் எண்ணெய்ச் சிந்து பாடப்பட்டது. சமூகம் அறிவுறுத்தப்பட்டது. அதனால் விழிப்படைந்த சமூகம் கல்வியில் உயர்வடைந்தது. இந்த முயற்சி இன்று வரையும் தொடர்கின்றது.
ஒளிக்கல்லூரி
எனும் நிறுவனம் வெற்றிப்பாதையினை நோக்கிச் செல்வதற்காகவும், அதன் செயற்பாட்டின் உண்மைத் தன்மையினையும் அறிந்து, இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளான பூதேத்மானந்தஜீ, ஜீவாத்மானந்தாஜீ, அஜராத்மானந்தாஜீ ஆகியோர் அதற்கு நல்லாசிகளை வழங்கினர். அத்தோடு முத்தையா முனிவரும் நல்லாசிகளை வழங்கியுள்ளார். மேலும் உயர் பதவிகளில் உள்ள பலர் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவ்வாறெல்லாம் ஒளிக்கல்லூரிக்கு பல
உதவிகளும் ஆசிகளும் வாழ்த்துக்களும் கிடைப்பதற்கு அந்த நிறுவனத்திற்கென்று அமையப் பெற்ற முறையான நிருவாக சபையும் நிருவாகக் கட்டமைப்பும் காரணமாகும்.
ஒளிக்கல்லூரியின் தத்துவம்
மேலைத்தேய,
கீழைத்தேய சிந்தனைகளின் ஒருமித்த பரிணாமத்தில் ஒளிக்கல்லூரி உருவானது. செக்குடியரசின் மொறோக்கோவில் நிக்ணஸ் எனுமிடத்தில் பிறந்த ஜோன் எமஸ் கொமனியஸ் (1592 – 1670) அவர்கள் ஒளிக்கல்லூரி எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார். இவரது Pan Sophism எனும் தத்துவம் கல்வியை நடைமுறை வாழ்வுடன் தொடர்புபடுத்தி, எல்லா அறிவும் திட்டமிட்ட முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்கிறது. இதில் ஆத்மீகம், தத்துவம், விஞ்ஞானமுறைக் கற்றல் என்பன ஒருங்கிணைந்துள்ளன. இவற்றில் நவீன கல்வியின் செல்நெறிகள் பொதிந்துள்ளன. குழந்தைகளைத் தங்கம், வெள்ளி, முத்து, ரத்தினம் என்பவற்றுக்கு மேலாக மதித்தல், அன்பைப் பொழிதல், உபகரணம் கொண்டு கற்பித்தல், மீளாய்வு செய்தல், திரும்பக் கற்பித்தல், கற்பிக்கப்படும் பாடங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்தல், நேரடி அவதானம், உண்மைப் பொருள் கொண்டு கற்பித்தல் எனும் செல்நெறிகள் தற்கால கல்வியுலகின் கருப்பொருள்களாக அமைகின்றன.
கொமனியஸ்,
ஒளிக்கல்லூரி எனும் நிறுவனத்தின் ஊடாக உலகம் முழுவதும் கல்வி வழங்க பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் அது கைகூடாமல் போனமை துரதிர்ஷ்டமே. எனினும் சுவாமி ஆறுமுக நாவலர், கொமனியஸின் ஒளிக்கல்லூரியின் செல்வாக்கைப் பெற்ற உகல்விச் சிந்தனையினை முன்வைத்தார். இவர், “ஒரு ஒளித் தீபத்திலிருந்து பல தீபங்கள் தோன்ற வேண்டும்” எனக் கூறினார். இதனாலே, “கல்வி என்பது விளக்கேற்றல்” போன்றது என்றார்.
ஏழை
மாணவர்களின் வாழ்வில் கல்வி ஒளி பாய்ச்சப்பட வேண்டும் என்பதற்காக பேராசிரியர் மா. செல்வராஜா அவர்கள் ஒளிக்கல்லூரி என்னும் சிறுவனத்தை படுவான்கரைப் பிரதேசத்தில் நிறுவி பல முற்போக்குக் கல்விச் சிந்தனைகள் கொண்ட இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு இலவசக் கல்வி வழங்கினார். மேலைத்தேய சிந்தனை படுவான்கரைப் பிரதேசத்தில் வெற்றி பெறுவதற்கு பேராசிரியர் மா. செல்வராஜா அவர்களின் முயற்சியும் அவர் படுவான்கரைப் பிரதேச மக்களின் வாழ்வில் கொண்டிருந்த பற்றுமே காரணிகளாகும்.