History

சுருக்க வரலாறு

1978ம் ஆண்டு ஏற்பட்ட கொடூரமான சூறாவளியால் பாடசாலைகள் பாரிய சேதத்திற்குள்ளாகி, மாணவர்களது கல்வி பாதிப்படைந்த சமயத்தில் சில இளைஞர்களது ஒத்துழைப்போடு ஒளிக்கல்லூரிச் சேவை ஆரம்பமாயிற்று. கல்வி வசதி வாய்ப்புகள் குறைந்த பிரதேசங்களில் உள்ள ஏழை மாணவர்களது நலன் கருதியே இவ்விலவசக் கல்விச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவையில் ஈடுபட்டு வந்த தற்பொழுது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற சகல ஆசிரியர்களும் தொண்டின் அடிப்படையில் தங்களது சேவையைப் பொறுத்த மட்டில் குறிப்பிடத்தக்க நல்ல அம்சமாகும். இக்கல்லூரியின் சேவையில் ஈடுபட்டு வரும் அனைவரும் உபநிடத மகாவாக்கியமாகஆகுக, ஆக்குகஎன்பதைத் தம் தாரக மந்திரமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர் என்பது இன்னொரு சிறப்பான அம்சமாகும்.

கல்வியும் கலாசாரமுமே இக்கல்லூரிச் சேவையின் இரு பிரதான நோக்கங்களாகும். கடந்த பதினேழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இச்சேவை விசேடமாக மட்டக்களப்பு வாவியின் தெற்கே அமைந்துள்ள பல கிராமங்களின் கல்வி வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பணியை ஆற்றியுள்ளது. தற்பொழுது இக்கிராமங்களில் உருவாகியுள்ள இளம் ஆசிரியர் தலைமுறை இக்கல்லூரிச் சேவையின் பிரதி பலனாகும் என்பதிலை ஐயமில்லை.

கல்லூரி தமது சேவையை நடத்துவதற்குக் கடந்த காலங்களில் பல இடர்பாடுகளை எதிர்கொண்டிருந்தும் அதன் ஆசிரியர்கள் அபிமானிகளது முயற்சியால் அவ்விடர்பாடுகளை நீக்கக் கூடியதாக இருந்தது.

பிரத்தியேகக் கல்விப் போதனை இன்று பரவலாக வளர்ச்சியடைந்து, இலவசக் கல்வியை அர்த்தமற்றதாக்கிக் கொண்டிருக்கும் காலமிது. பெற்றோர் இன்று பெருந்தொகையான பணத்தைப் பிரத்தியேகக் கல்விப் போதைனக்காகச் செலவிடுகின்றனர். இந்நிலையில் வறிய பெற்றோரின் பிள்ளைகளது கல்வி பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

இந்நிலையில் ஒளிக்கல்லூரி போன்ற தொண்டர் தாபனங்களின் பணி ஏழைச் சிறார்களுக்கு அவசியமானதொன்றாக உள்ளது. கடந்த முப்பத்தாறு வருடங்களாக இச்சேவை பல தங்கு தடைகளைத் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு இராமகிரஷ்ண சங்கம், மடம் ஆகியவற்றின் தலைவர் சுவாமி பூதேஷானந்தாஜி மகராஜ் அவர்களது ஆசியே மூலகாரணம் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

1994ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்பெரியாரது தர்சனத்தைப் பெறும் பேறு கிடைத்த போதும் அதற்கு முன்னரும் நான் கேட்டுக் கொண்டது கல்லூரியை ஆசிர்வதிக்க வேண்டும் என்பது மட்டுமே. அப்பெரியாரது ஆசீர்வாதம் இக்கல்லூரியை வழிநடத்துகின்றது என்பதே எனது திடமான நம்பிக்கை.


1978.11.23ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தினை கொடூரச் சூறாவளி தாக்கியதனால் பொருளாதாரம், கல்வி பெறும் நிலை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அதிலும் படுவான்கரைப் பிரதேசம் படுமோசமான தாக்கத்துக்கு உள்ளானது. மாணவர்கள் கல்வி பெறுவதில் தொடர்ந்தும் இடர்பாடுகளையே சந்தித்த வண்ணமிருந்தனர். உயர்கல்வி பெறுபவர்களுடைய விகிதாசாரம் மிகக் குறைவாகவே இருந்தது. அதனால் சமூகத்தில் பிரச்சினைகளும் பிற்போக்குத் தனங்களும் ஏற்படவே செய்தன. மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கழித்தால் போதும் எனும் குறுகிய நோக்கம் உடையவர்களாகவே பெரும்பாலானோர் இருந்தனர். விவசாயத்தை ஜீவனோபாய தொழிலாகக் கொண்ட இவர்கள் கல்வியில் அதிக அக்கறை உடையவர்களாக பிரகாசிக்க தொடர்ந்தும் தவறிக் கொண்டே வந்தனர். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒளிக்கல்லூரி எனும் நிறுவனம் அவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி கல்வி புகட்ட முன்வந்தது.

ஒளிக்கல்லூரி எனும் நிறுவனம் 14.04.1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் முன்னர், நான் எனது முனைக்காட்டுக் கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து தயாசீலன், மகேஸ்ரெத்தினம், ரவிராஜ் போன்ற மாணவர்களுக்கு புவியியல் பாடம் சொல்லிக் கொடுத்தேன். இவ்வாறாக பல மாணவர்கள் கல்வி பெற்றுச் சென்றனர். பின்னர் முனைக்காட்டுக் கிராமத்தின் தற்போதுள்ள விவேகானந்த அரசடித்தீவு, கன்னங்குடா ஆகிய இடங்களில் கிளைகளாகச் செயற்பட்டன. இத்தகைய கிளைகள் அப்பிரதேசங்களில் உள்ள .பொ.. சாதாரண தரம் உள்ள பாடசாலைகளை இணைத்துச் செயற்பட்டன. இந்த இணைப்பு மாணவர்களுடைய வசதி கருதி ஏற்படுத்தப்பட்டது.

ஒளிக்கல்லூரிக்கென்று ஒரு அதிபரும், ஒரு பிரதி அதிபரும், இணை அதிபர்களாக இருவரும், பொருளாளர் ஒருவரும், நெறியாளர்கள் இருவரும், கணக்குப் பதிவாளர்கள் இருவரும், செயலாளர், உபசெயலாளர் பதவிகளுக்கென ஒவ்வொருவரும், உறுப்பினர்கள் ஏழு பேரும் இருப்பர். ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு இணை அதிபர்கள் இருப்பர். இது பொதுவான நிருவாகசபை முறையாகும். மாணவர் கட்டமைப்பு பாடசாலையில் உள்ளதைப் போன்றே மாணவர் தலைவர் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் இருப்பர். ஒழுங்கும் ஒழுக்கமும் பிரதானமாகப் பேண வழி செய்யப்பட்டு அதுவே நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்டு மாணவர் ஒழுக்கம் போல் ஆசிரியர் ஒழுக்கமும் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. கற்றல் பணிக்காக ஆசிரியர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டமையை என்றும் மறக்க முடியாது.

கற்றல்கற்பித்தல் பணிக்கு அப்பால் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. நவராத்திரி விழா, பாரதி விழா, விளையாட்டுப் போட்டி, கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இடம்பெற்று வந்தன. இதற்கு மக்களுடைய ஆதரவு தொடர்ந்தும் கிடைத்தன.

பொதுமக்களை கல்வியின் பால் ஈர்க்கத் தூண்டும் நோக்கோடு கிராமம் கிராமமாகச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் வைக்கப்பட்டன. இதனை முன்னின்று நடத்தியவர் எஸ். தம்பிராசா (சுவிஸ்) அவர்களாவர். பிரச்சாரப் பணியால் அறிவுறுத்தப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் எனும் முடிவுக்கு வரத் தொடங்கினர். அதன் விளைவாக படிப்படியாக மாற்றம் ஏற்படவே செய்தன. அத்தகைய மாற்றம் இடம்பெற்றமையினை இன்றைய படுவான்கரைச் சமுதாய அமைப்பிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

ஒளிக்கல்லூரியின் செயற்பாட்டுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் அவ்வப்போது சில உதவிகளையும் செய்தன. இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், மன்று, மட்டக்களப்பு கல்வி மேம்பாட்டுக் கழகம், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம், றெட்பானா, நொறாட், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் போன்றவை பல கோணங்களில் உதவின. இவர்கள் பணமாக உதவி செய்யவில்லை. ஆனால் பொருட்கள் வழங்கினர். ஆசிரியர்களுக்கான உளநலப் பயிற்சியை வழங்கினர். கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து வைத்தனர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒளிக்கல்லூரிக்கென்று ஒரு வளவினை முதலைக்குடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு . கதிர்காமப்போடி அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர். அது போல் அந்த வளவினுள் கட்டிடம் ஒன்றை சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைக்காட்டைச் சேர்ந்த முன்னாள் ஒளிக்கல்லூரியின் அதிபர் மா. குமாரசுவாமி அவர்கள் கட்டித்தந்தார். அத்தோடு இவர் ஐந்து மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும் வழங்கினார்.

வரதனின் தலைமையில் ஒளி கற்கை 1984ல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. இதற்கு கணேசலிங்கம் உதவியாக இருந்தார். இது ஒளிக்கல்லூரி வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். இந்தச் சஞ்சிகை ஆறு இதழ்களாக வெளிவந்தது. இதற்கு ஒளி என்றே பெயரிட்டனர். மிகவும் சிறப்பான ஒரு முயற்சியாகும்.

இவற்றுக்கு மேலாக ஒளிக்கல்லூரியின் வெற்றிக்கு இராமகிருஷ்ண மிஷனின் ஆசீர்வாதமே காரணமாக இருந்தது. சுவாமி பூதேஷானந்தஜீ மகராஜ் அவர்களுடைய ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்த வெற்றியாகும். எனது குருநாதரும் அவரே. ஒளிக்கல்லூரியின் வளர்ச்சியைப் பற்றி பல கடிதங்கள் எழுதியுள்ளார். இவர் விவேகானந்தரின் சீடரின் சீடனாவார். இதுபோல் சுவாமி ஜீவாத்மானந்தாஜீ, சுவாமி அஜராத்மானந்தாஜீ ஆகிய இருவரும் ஆசீர்வதித்துள்ளனர். கட்டிடத்துக்கான கல்லை சுவாமி ஜீவானந்தாஜீ நட, கட்டிடத்தினை சுவாம அஜராத்மானந்தாஜீ திறந்து வைத்து ஆசீர்வதித்தமை உயர்ந்த இலட்சியத்துக்கு உறுதுணையாக இருந்தது.


தற்போது ஒளிக்கல்லூரி மக்கள் கல்லூரி என்று கூறுமளவுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. அதன் சேவையை மக்கள் நன்கு உணரத் தொடங்கியுள்ளனர். இது போன்ற சேவை குறிப்பாகக் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பிள்ளைகளுக்கு அவசியமானது. நாட்டிலுள்ள வசதி குறைந்த பிரதேசங்களிலுள்ள பிள்ளைகளுக்கு இது போன்ற தொண்டர் தாபன சேவை அவசியமானது. எதிர்காலச் சந்ததியின் நலனில் அக்கறையுள்ளோர் இவ்வாறான சேவையை வழங்க முன்வருவார்களாயின் நன்று.