பேராசிரியர்
மா. செல்வராஜா அவர்களின் ஒளிக்கல்லூரி எனும் எண்ணக்கரு
இராமகிருஷ்ண
மிஷன் போதனையே இவரது சாதனைக்கான பின்னணியாகும். இராமகிருஷ்ணரின் நேர் சீடரான சுவாமி சாரதானந்தரின் சீடரான இராமகிருஷ்ண சங்கம், மடம் ஆகியவற்றின் தலைவர் சுவாமி பூதேஷானந்த ஜீ மகராஜ் அவர்களது ஆசீர்வாதமே ஒளிக்கல்லூரியின் வெற்றிக்கான பின்னணியாகும் என பேராசிரியர் மா. செல்வராஜா அவர்களே குறிப்பிடுகிறார். அத்தோடு சுவாமி ஜீவானந்த ஜீ, சுவாமி அஜராத்மானந்த ஜீ ஆகியோர்களின் ஆசீர்வாதமும் அவ்வப்போது ஒளிக்கல்லூரிக்கு இருந்து வந்தது. ஒளிக்கல்லூரிக்கான கட்டிடத்துக்கான கல்லை சுவாமி ஜீவானந்த ஜீ அவர்கள் நட, கட்டிடத் திறப்பு நிகழ்வை சுவாமி அஜராத்மானந்த ஆ ஜீ அவர்கள் திறந்து வைத்தார்.
விவேகானந்தருடைய கல்வியின்
நோக்கம் “மனிதனை ஆக்குவதாகும்”. இத்தகைய சிந்தனையின் பால் தூண்டப்பட்ட பேராசிரியர் மா. செல்வராஜா அவர்கள் ஒளிக்கல்லூரியின் குறிக்கோள் வாக்கியமாக, “ஆகுக, ஆக்குக” என்பதனை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தினார்.
“ஒளிக்கல்லூரி” எனும் சொல் ஜோன் எமஸ். கொமனியசுடைய Pan sopism எனும் கல்வித் தத்துவத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஒளிக்கல்லூரி என்பது College of light எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாகும். இதனை தமிழ்ப்படுத்தியவர் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்கள். College of light என்பது, கிறிஸ்தவ சம்பிதரதாயங்களுடன் கூடிய சொல்லாகும். இந்த ஆங்கில வடிவம் கல்வி நிறுவனத்தின் பெயராக மாற்றப்பட்டு வெற்றி கண்டது.
எனவே,
பேராசிரியர் மா. செல்வராஜா அவர்களின் ஒளிக்கல்லூரித் தத்துவம் மேலைத்தேய, கீழைத்தேய கல்விச் சிந்தனைகளை இணைத்து புதியதொரு தத்துவ வடிவில் அமைந்தது. அந்த முறைமை படுவான்கரைப் பிரதேசத்தில் ஒளிக்கல்லூரி நிறுவனத்தின் ஊடாக வெற்றி பெற்றுள்ளது. ஆகவேதான், மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனைகளை இணைத்து நடைமுறையில் வெற்றி கண்ட பெருமைக்குரியவராக பேராசிரியர் மா. செல்வராஜா அவர்கள் கொள்ளப்படுகின்றார்.
--------------------------------------------------------------------------
நேர்காணல்
பேராசிரியர்
மா. செல்வராஜா அவர்கள்
நான்
வெளிநாடுகளில்
கல்வி பெறுவதற்காகச் சென்றிருந்தேன். அங்குள்ள கல்விச் சூழ்நிலையினை நன்கு அவதானித்து எனது கற்றலையும் மேற்கொண்டேன்.த அந்த வேளையில்தான் ஜோன் எமஸ் கொமினியஸ் உடைய Pan sophism எனும் தத்துவத்தில் பிறந்த College of Light எனும் சொல் என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது. இதன் தமிழ் வடிவம் ஒளிக்கல்லூரியாகும். இதன் மூலம் கொமினியஸ் உலகம் முழுவதும் கல்வி கொடுப்பதற்கு எண்ணியிருந்த போதும் அது கைகூடுவதற்கு முன்னர் அவர் இறந்து விட்டார். இது உலக கல்வி வரலாற்றில் ஏற்பட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும். அந்த College of Light எனும் திட்டம் நடைமுறைப்பட்டிருந்தால் சகலருக்கும் கல்வி இலகுவாகக் கிடைத்திருக்கும்.
இது
ஒரு புறமிருக்க, வேதாந்த சிந்தனையின் மரபுவழி வந்த கல்வியும் என்னை வியக்க வைத்தது. அதிலும் விவேகானந்தருடைய மனிதனை ஆக்கும் கல்வி (Man Making) என்னை மேலும் சிந்திக்க வைத்தது. விவேகானந்தர் உபநிடத சிந்தனையில் உதித்த “ஆகுக, ஆக்குக” எனும் குறிக்கோளை Mak Making ஆகப் பயன்படுத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இவர் அறிவெனும் ஒளியானது அறியாமையினை அகற்றிக் கொண்டு படிப்படியாக அதனைச் சிதறடிக்கின்றது என்றார். அத்தோடு கல்வி வழங்குகின்ற ஒவ்வொருவரும் அதற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றார். ஆசிரியர்கள் தங்களது சேவையினை வழிபாடாகச் செய்ய வேண்டும். அப்பணியில் என்னை நான் அர்ப்பணிக்க வேண்டும் போன்ற கருத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தன.
1977ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிக் கற்கையினைக் கற்றுக் கொண்டிருந்த போது படுவான்கரை மக்களினுடைய வாழ்க்கையினை உயர்த்துவதற்கு என்ன வழி என்று சிந்தித்தேன். அதற்கு அவர்களை கல்வி பற்றி சிந்திக்கச் செய்வதுதான் என்பதனை உணர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். இதற்கு என்னுடன் கற்ற குழு ஒன்று இணைந்து கொண்டது. அவர்களுள் குணசீலன், வரதசீலன், தயாசீலன், கணேசலிங்கம், ஏரம்பமூர்த்தி, மகேசரெத்தினம், குமாரசுவாமி, சிதம்பரப்பிள்ளை, தம்பிராசா, குருபரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் எல்லோரும் தற்காலத்தில் உயர் பதவிகளை வகிக்கின்றார்கள்.
1978.11.23ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தினை கொடூரச் சூறாவளி தாக்கியதனால் பொருளாதாரம், கல்வி பெறும் நிலை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அதிலும் படுவான்கரைப் பிரதேசம் படுமோசமான தாக்கத்துக்கு உள்ளானது. மாணவர்கள் கல்வி பெறுவதில் தொடர்ந்தும் இடர்பாடுகளையே சந்தித்த வண்ணமிருந்தனர். உயர்கல்வி பெறுபவர்களுடைய விகிதாசாரம் மிகக் குறைவாகவே இருந்தது. அதனால் சமூகத்தில் பிரச்சினைகளும் பிற்போக்குத் தனங்களும் ஏற்படவே செய்தன. மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கழித்தால் போதும் எனும் குறுகிய நோக்கம் உடையவர்களாகவே பெரும்பாலானோர் இருந்தனர். விவசாயத்தை ஜீவனோபாய தொழிலாகக் கொண்ட இவர்கள் கல்வியில் அதிக அக்கறை உடையவர்களாக பிரகாசிக்க தொடர்ந்தும் தவறிக் கொண்டே வந்தனர். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒளிக்கல்லூரி எனும் நிறுவனம் அவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி கல்வி புகட்ட முன்வந்தது.
ஒளிக்கல்லூரி
எனும் நிறுவனம் 14.04.1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் முன்னர், நான் எனது முனைக்காட்டுக் கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து தயாசீலன், மகேஸ்ரெத்தினம், ரவிராஜ் போன்ற மாணவர்களுக்கு புவியியல் பாடம் சொல்லிக் கொடுத்தேன். இவ்வாறாக பல மாணவர்கள் கல்வி பெற்றுச் சென்றனர். பின்னர் முனைக்காட்டுக் கிராமத்தின் தற்போதுள்ள விவேகானந்த அரசடித்தீவு, கன்னங்குடா ஆகிய இடங்களில் கிளைகளாகச் செயற்பட்டன. இத்தகைய கிளைகள் அப்பிரதேசங்களில் உள்ள க.பொ.த. சாதாரண தரம் உள்ள பாடசாலைகளை இணைத்துச் செயற்பட்டன. இந்த இணைப்பு மாணவர்களுடைய வசதி கருதி ஏற்படுத்தப்பட்டது.
ஒளிக்கல்லூரிக்கென்று ஒரு அதிபரும், ஒரு பிரதி அதிபரும், இணை அதிபர்களாக இருவரும், பொருளாளர் ஒருவரும், நெறியாளர்கள் இருவரும், கணக்குப் பதிவாளர்கள் இருவரும், செயலாளர், உபசெயலாளர் பதவிகளுக்கென ஒவ்வொருவரும், உறுப்பினர்கள் ஏழு பேரும் இருப்பர். ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு இணை அதிபர்கள் இருப்பர். இது பொதுவான நிருவாகசபை முறையாகும். மாணவர் கட்டமைப்பு பாடசாலையில் உள்ளதைப் போன்றே மாணவர் தலைவர் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் இருப்பர். ஒழுங்கும் ஒழுக்கமும் பிரதானமாகப் பேண வழி செய்யப்பட்டு அதுவே நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்டு மாணவர் ஒழுக்கம் போல் ஆசிரியர் ஒழுக்கமும் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. கற்றல் பணிக்காக ஆசிரியர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டமையை என்றும் மறக்க முடியாது.
கற்றல்
– கற்பித்தல் பணிக்கு அப்பால் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. நவராத்திரி விழா, பாரதி விழா, விளையாட்டுப் போட்டி, கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இடம்பெற்று வந்தன. இதற்கு மக்களுடைய ஆதரவு தொடர்ந்தும் கிடைத்தன.
பொதுமக்களை
கல்வியின் பால் ஈர்க்கத் தூண்டும் நோக்கோடு கிராமம் கிராமமாகச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் வைக்கப்பட்டன. இதனை முன்னின்று நடத்தியவர் எஸ். தம்பிராசா (சுவிஸ்) அவர்களாவர். பிரச்சாரப் பணியால் அறிவுறுத்தப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் எனும் முடிவுக்கு வரத் தொடங்கினர். அதன் விளைவாக படிப்படியாக மாற்றம் ஏற்படவே செய்தன. அத்தகைய மாற்றம் இடம்பெற்றமையினை இன்றைய படுவான்கரைச் சமுதாய அமைப்பிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
ஒளிக்கல்லூரியின் செயற்பாட்டுக்காக மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் அவ்வப்போது சில உதவிகளையும் செய்தன. இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், மன்று, மட்டக்களப்பு கல்வி மேம்பாட்டுக் கழகம், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம், றெட்பானா, நொறாட், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் போன்றவை பல கோணங்களில் உதவின. இவர்கள் பணமாக உதவி செய்யவில்லை. ஆனால் பொருட்கள் வழங்கினர். ஆசிரியர்களுக்கான உளநலப் பயிற்சியை வழங்கினர். கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து வைத்தனர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஒளிக்கல்லூரிக்கென்று ஒரு வளவினை முதலைக்குடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு க. கதிர்காமப்போடி அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர். அது போல் அந்த வளவினுள் கட்டிடம் ஒன்றை சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைக்காட்டைச் சேர்ந்த முன்னாள் ஒளிக்கல்லூரியின் அதிபர் மா. குமாரசுவாமி அவர்கள் கட்டித்தந்தார். அத்தோடு இவர் ஐந்து மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும் வழங்கினார்.
வரதனின்
தலைமையில் ஒளி கற்கை 1984ல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. இதற்கு கணேசலிங்கம் உதவியாக இருந்தார். இது ஒளிக்கல்லூரி வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். இந்தச் சஞ்சிகை ஆறு இதழ்களாக வெளிவந்தது. இதற்கு ஒளி என்றே பெயரிட்டனர். மிகவும் சிறப்பான ஒரு முயற்சியாகும்.
இவற்றுக்கு
மேலாக ஒளிக்கல்லூரியின் வெற்றிக்கு இராமகிருஷ்ண மிஷனின் ஆசீர்வாதமே காரணமாக இருந்தது. சுவாமி பூதேஷானந்தஜீ மகராஜ் அவர்களுடைய ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்த வெற்றியாகும். எனது குருநாதரும் அவரே. ஒளிக்கல்லூரியின் வளர்ச்சியைப் பற்றி பல கடிதங்கள் எழுதியுள்ளார். இவர் விவேகானந்தரின் சீடரின் சீடனாவார். இதுபோல் சுவாமி ஜீவாத்மானந்தாஜீ, சுவாமி அஜராத்மானந்தாஜீ ஆகிய இருவரும் ஆசீர்வதித்துள்ளனர். கட்டிடத்துக்கான கல்லை சுவாமி ஜீவானந்தாஜீ நட, கட்டிடத்தினை சுவாம அஜராத்மானந்தாஜீ திறந்து வைத்து ஆசீர்வதித்தமை உயர்ந்த இலட்சியத்துக்கு உறுதுணையாக இருந்தது.

